Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

நபி (ஸல்) உம்மத்தில் இமாம்களின் தேவை!

நமது பெருமானார் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஷரியத்தை கொண்டுவராத நபிமார்களின் வருகையின் முக்கிய நோக்கம் இதுவாகும், அதாவது இஸ்லாம் உலகப் பொதுமறையாக தோன்றிய மார்க்கமாகும் என்பதால் இதன் தூய போதனையை உலகம் முழுவதும் எத்திவைப்பது அவசியமாகின்றது என்பதாகும். இந்த உன்னத நோக்கத்தை அடைவதற்கு முதலாவதாக உம்மத்திற்குள் மார்க்க சீர்திருத்தம் அதாவது முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்துவது இரண்டாவதாக அதன் மூலம் இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரவச் செய்வது இவ்விரண்டிற்கும் நல்லொழுக்கம் மற்றும் ஒரு தலைமை, ஒரு இமாம் இல்லாமல் இது சாத்தியமானதன்று இதைப்பற்றி அல்லாஹ் சுபஹான ஹுதாலா திருமறையில் கூறும்போத:-

தூயவர்களிலிருந்து, தீயவர்களை வேறுபடுத்திக் காட்டாத வரையில் நீங்கள் இருக்கும் நிலையிலேயே நம்பிக்கையாளர்களை இறைவன் விட்டு வைக்க மாட்டான். அல்லாஹ் உங்களுக்கு மறைவானதைப் பற்றி ஒரு போதும் அறிவிக்க(வும்)மாட்டான்.ஆனால் அல்லாஹ் தனது தூதர்களிலிருந்து, தான் நாடிய வரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதர்களிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்வீர்களாயின் உங்களுக்குப் பெரும் நற்பலன் கிடைக்கும். (திருகுரான் 3:180)

நம்பிக்கைகொண்டோர் என்று கூறுபவர்களே! நான் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன், மேற்கூறிய திருமறை வசனத்திலிருந்து நன்மையும் தீமையும் ஒன்றாக கலந்துள்ள நிலையில் இஸ்லாம் மிகவும் பலகீனமடைகின்றது, இந்த நிலையில் தொடர அந்த ஏக இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவன் நிச்சயமாக தன் நபிமார்களை அனுப்பி நன்மையையும் தீமையையும் பிரிக்கின்றான், மேலும் இன்று வரை நன்மை எது என்பதன் இரகசியத்தையும், அதை எவ்வாறு அவன் தூதரை கொண்டு பிரிக்கின்றான் என்பதையும் அவனுக்குள்ளே வைத்துள்ளான். மேலும், இந்த பணிக்காக உங்களுக்கிடையில் இறைச்சம் கொண்ட ஒருவரை அவனே தேர்வு செய்து அவர்முலமாக அவன் உங்களை பிரிப்பான். எனவே நம்பிக்கை கொண்டோர்களே! “அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்”

உங்களிடையில் தூதர் வரமாட்டார் என்றால் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு காலம் வரும் அப்போது நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசத்தை காட்ட ஒரு தூதரை அனுப்பிவைப்பான் என்று ஏன் கூறவேண்டும்? மேலும், அந்த நபி மீது நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்ள ஏன் நமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது? இது நாம் அஞ்சவேண்டிய விஷயமல்லவா, சிந்திப்போருக்கு இதில் நிச்சயமாக விஷயமுள்ளது.

அருமையானவர்களே! நாம் வாழும் இந்த காலத்தில் கோடான கோடி முஸ்லீம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் கையில் ஆட்சி அதிகாரமும் மற்றும் செல்வசெழிப்பும் உள்ளது மேலும் எண்ணிலடங்கா மார்க்க உலமாக்களும் அவர்களிடையே உள்ளனர், ஆனாலும் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் நாடுகளுக்கு எதிராக ஒன்றுமே செய்வதில்லை, மேலும் இவர்களின் கருத்துக்கள் உண்மையான இஸ்லாத்தின் போதனையை பிரதிபலிப்பதில்லை.

மறுபுறம் இஸ்லாம் அதன் அழகிய பொலிவை நாளுக்குநாள் இழந்து கொண்டே செல்கின்றது, உண்மையான இஸ்லாமிய போதனைகள் தூக்கி எறியப்பட்டுவருகின்றது , மேலும் இவர்கள் எடுத்துக்காட்டும் இஸ்லாமால் இஸ்லாத்திற்கு மேலும் கெட்ட பெயரே மிஞ்சுகின்றது, இன்னும் கூறுவதென்றால் இவர்களின் செயல்களால் இஸ்லாம் ஒரு கொடிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமாக சித்தரித்துக்காட்ட காரணமாக அமைகின்றது . தன்னை இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று இவர்களால் இஸ்லாத்தின் இனிய போதனைகள் இழிவுபடுத்தப்படுகின்றது, மேலும் இந்த முழுமை பெற்ற தலைசிறந்த மார்க்கம் உலகெங்கிலும் உள்ள ஏனைய மதங்களுக்கு முன் மிகவும் கெட்ட மார்க்கத்தைப்போல சித்தரித்து காட்டுகின்றனர்.

எனவே என் அன்பிற்குரியவர்களே! இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்தற்கு ஆட்சி அரசாங்கமோ , செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக இந்த வேலைக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ்வின் அருளால் இந்த பணியை ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றது, இந்த ஜமாத்தில் உலக செல்வச்செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை மாறாக எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்க முடியாது.

ஏனென்றால், இவர்களுடன் அந்ததூய அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் உள்ளார். மேலும் அவர் இந்நூற்றாண்டின் இமாமாகவும் திகழ்கின்றார், இம்மக்களின் இதயத்தில் இறைநம்பிக்கையும் இறையச்சமும் நிரம்பி மேலும் ஒவ்வொரு கணமும் திருகுரானின் போதனைகளின்படி வாழ்வதற்காக முயலுகின்றார்கள் அவர்கள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் தியாகம் செய்வதற்காக எப்போதும் தயாராக உள்ளனர். இஸ்லாத்திற்காக இவர்களால் செய்யப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு வழிகாட்ட அந்த ஏக இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட உயரிய நல்லொழுக்கம் நிறைந்த ஒரு இமாம் உள்ளார். மேலும், இவர்கள் அனைவரும் இந்த ஜமாத் மட்டுமே நமது தலைவர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்தை எடுத்து செல்கின்றது என்பதை திட்டமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

நிச்சயமாக, அல்லாஹ் சுபஹானஹுதாலா இம்மக்களை அருளுக்குரியவர்களாக ஆக்கியுள்ளான், ஏனென்றால் இவர்கள் அவனால் அனுப்பப்பட்ட கலீபாத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவராகவுள்ளனர். இந்த அதிஷ்டத்திற்குரிய மக்கள் இன்னும் அதிகமாக உழைத்து மேலும் இந்த உண்மையை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இன்னும் அதிகமாக மக்கள் இந்த உண்மையான இஸ்லாத்தை நோக்கி வருவார்கள். இந்த உண்மையான இஸ்லாத்தின் தூது செய்தியை உலகெங்கிலும் கொண்டு செல்ல அந்த ஏக இறைவனே அவனது மாபெரும் அருளால் வழிகாட்டுவான் இன்ஷா அல்லாஹ், மீண்டும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக எந்த தடையுமின்றி ஓரிறைவனை எந்த இணை வைத்தலுமின்றி வணங்குவார்கள். இந்த விஷயத்தில் நிச்சயமாக அல்லாஹூம் அவனது கலீபாதுல்லாஹ்வும் மிகைத்து விடுவார்கள் இறுதி வெற்றி இஸ்லாதிற்க்கே, இன்ஷா அல்லாஹ்

மேலும் அல்லாஹ் அவனது கலீபாவை பற்றி திருக்குரானில் கூறும்போது:- 

அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும் அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்கமாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுபடாதவர்களாவார்கள். (திருகுரான் 24:56)

எனவே எனதருமை முஸ்லீம் சகோதர சகோதிரிகளே! துஆவுடனும், விழிப்புடனும் இருங்கள், ஏனென்றால் இஸ்லாம் அதன் உண்மையான பொழிவை சிறிது சிறிதாக இழந்து வருகின்றது. நீங்களும் உங்கள் குழந்தைகளும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளிலிருந்து விலகி சென்று கொண்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஸகாபிகளின் உறுதியானஅந்த நம்பிக்கையும் ஒற்றுமையும் இப்போது எங்கே போயிற்று? சற்று சிந்தியுங்கள்!

என் அன்பிற்குரியவர்களே! அதே போன்ற ஒற்றுமையையும் நம்பிக்கையையும் இறைவன்அவனது கலீஃபா மூலம் முழு உலகிலும் மீண்டும் மீட்டெடுக்க எண்ணுகின்றான். இப்போது முஸ்லிம்கள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றனர் மறுபுறம் இறை மறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் எனும் சூறாவளிகள் இஸ்லாத்தைத் துடைத்தெறிய எண்ணுகின்றனர், இப்போது நமது இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் எப்போது நிறை வேற்றுவான் என்பதை சிறிது சிந்தியுங்கள்! நிச்சயம் இறைவன் அவனுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவான். இதனால் தான் அவன் இந்நூற்றாண்டில் அவனது முஜத்தித் மற்றும் கலீபஃதுல்லாஹ்வை உங்களுக்காக அனுப்புவதன் மூலம் அதை நிறை வேற்றுகின்றான்.

உங்களுக்காக அவன் இக்காலத்தில் அருளாக அனுப்பிய கலீபஃதுல்லாஹ் மீது ஏன் விரோத மனப்பான்மையில் உள்ளீர்கள்? நீங்கள் இந்த உலமாக்களின் பித்துக்களில் வீழ்ந்துவிடாதீர்கள்! அவர்கள் என்றோ நபிமார்கள் மற்றும் இறை வஹியின் கதவை அடைத்துவிட்டு பித்அத்களின் கதவுகளை திறந்து வைத்துள்ளனர். இவர்களுக்கு (உலமாக்கள்) முக்கியத்துவம் போய்விடும் என்பதிற்காக திருக்குரானில் உண்மை ஞானத்திலிருந்து உங்களை தூர விலக்கி வைத்துள்ளனர். இதைப் போன்ற தீய உலமாக்களை பற்றி பெருமானார் (ஸல்) நம்மை எச்சரித்தது உங்களுக்கு நினைவில்லையா? சிறிது கண்களை திறந்து பாருங்கள், 

மேலும் பெருமானார் (ஸல்) “ஒரு காலம்வரும் அப்போது இவர்களின் உலமாக்கள் வானத்தின் கீழ் மிக கெட்ட ஜந்துக்களாக இருப்பார்கள்” என்று கூறியதும் உங்களுக்கு தெரியவில்லையா? எனவே சகோதரர்களே! அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள் வாருங்கள்! எங்களுடன் கைகோர்த்து அந்த உண்மையான இஸ்லாத்தை உலகங்கிலும் பரப்புவோம், மேலும் நமது தலைவரும் எஜமானருமாகிய நபி (ஸல்)அவர்களின் உண்மை நோக்கத்தை இந்த பூமிமுழுவதும் வெற்றியடைய செய்வோம்.

என்னுடைய சகோதர சகோதரிகளே! நமது அன்பிற்கும் பாசத்திற்குரிய கண்ணியமிக்க நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றுவதன் மூலமும் அவருடைய முத்திரையுடனும் வரும் நுபுவ்வத் என்றென்றும் நிலைத்திருக்கும். நிச்சயமாக, இனிவரும் அனைத்து நபிமார்களும் அன்னாருடைய அடிமைகளாகவும் அன்னாரை பின்பற்றுபவர்களாகத்தான் வருவார்கள். மேலும் இவர்களை அந்த ஏக இறைவன் கியாமத்நாள் வரை அனுப்பிக்கொண்ட இருப்பான், இதை தடுக்க எவராலும் இயலாது. இது நமது இறைவன் உறுதியளித்த மாபெரும் அருளாகும் அவன் ஒருபோதும் அவனுடைய வாக்குறுதியை மீறுபவன் அல்லன், இதன்முலமே, இந்த மார்க்கத்தை புதுப்பிக்கின்றான்.

இறைவன் ஒரு நபியையோ அல்லது ஆன்மிக சீர்திருத்தவாதியையோ அனுப்புவதன் நோக்கமே உலகத்தில் மூழ்கிக்கிடக்கும் மனிதனை மீட்டு அவனை படைத்த இறைவனடி சேர்ப்பதாகும். அவ்வாறாக தோன்றும் ஆன்மிக சீர்திருத்தவாதி அவர்களிடம் இறைவனுக்காக கடினமாக உழைக்கும்படியும், மேலும் அவனுக்காக எல்லாவித தியாகங்களும் செய்யும்படியும் கோருகின்றார் .முக்கிமாக இதை மிகவும் பொறுமையாகவும், அந்த நிரந்தர வாழ்க்கைக்காக இந்த தற்காலிக வாழ்க்கையை கொடுக்க தயாராக இருக்க வேண்டுகின்றார். மேலும், அவர்களை கண்முடித்தனமான மூற்க குணம்கொண்ட மார்க்க எதிரிகளின் துன்புறுத்தல்களையும் வேதனைகளையும் ஏச்சு பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு மிக நீண்ட பயணம் மேற்க்கொள்ள தயார்படுத்துகின்றார்.

உண்மையில் இந்த போதனையே ஒரு உண்மையான ஆன்மீகத்தை சீர்திருத்தும் இறை நீதியின் தத்துவமாகும். இதற்கு முன் எந்த ஒரு தத்துவமும் கற்பனையானே, மேலும் இறுதியாக அனைத்து முஸ்லிம்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்! நீங்கள் எந்த முஸ்லீம் பிரிவை சார்ந்தவர்களாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என்று நம்புகின்றீர்கள், மேலும் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள், இன்னும் நாம் அனைவருமே இஸ்லாமே மனித குலத்தின் இரட்சிப்பிற்கு ஒரே வழி என்று எற்றுக் கொள்கின்றோம், இஸ்லாம் மார்க்கமே இறுதிநாள் வரை மனிதனின் ஆன்மீக தேடலுக்கு ஒரே தீர்வு என்பதை நாம் அனைவரும் திட்டமாக நம்புகின்றோம்.

அனைத்து முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்கள் நமக்களித்த ஷரியத்தே இறுதியானது என்றும் அது ஒருபோதும் மாறாது என்றும் இறைவன் நமக்கருளிய திருக்குரான் இறக்கப்பட்டதிலிருந்து இதுவரை அவனே பாதுகாக்கின்றான் என்றும் பெருமானார்( ஸல்) நமக்கு வழங்கிய போதனைகள் கடந்த காலத்தைப் போன்று இன்றும் ஏன் கடைசி மனிதன் வரை ஒரு சிறந்த பாடமாக விளங்கும் என்றும் அன்னாரை பின்பற்றுவதன் மூலமே அந்த ஆன்மீக வெளிச்சத்தை பெறமுடியும் என்றும் ஏற்றுக் கொள்கின்றோம். நான் மேற்குறிய அனைத்து விஷயத்திலும் நாம் அனைவரும் ஒத்த கருத்திலுள்ளோம் ஆனால் உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு அடிப்படை இஸ்லாமிய கோட்பாட்டில் மாறுபடுகின்றோம் அதாவது நீங்கள் நபிமார்களின் வருகை மற்றும் இறை வஹியின் வருகை என்னும் அந்த அருளுக்குரிய கதவை அடைத்து விட்டீர்கள் என்பதேயாகும்.

எனவே அந்த தூய இறைவனால் படைக்கப்பட்ட எனதருமை உண்மையாளர்களே! நேர்மையானவர்களே! நல்லுள்ளம் கொண்டவர்களே! அந்த அற்புத இறை இலக்கையடைய உதவிகரங்கள் நீட்டுங்கள் இதன்முலம் இந்த ஏக இறைவனின் அருளுக்கு வாரிசு ஆகுங்கள், எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த அருளுக்குரிய வாரிசாகும் சந்தோஷத்தை தந்தருள்வானாக! ஆமீன்.