Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

Elementor #3371

நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்கள்

நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்களது பிறப்பிற்கு முந்தைய நிகழ்வுகள்

எனவே, அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முந்தைய உலகத்தையும் அரேபியாவையும் சித்தரிப்போம்.(அப்போது) உலகின் நிலையானது நிலையற்றதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. சீர்கெட்ட பழமைவாதிகளுக்கும்,சீன கலாச்சாரம் மற்றும் இந்தியப் புத்த(மத)த்தில் ஊறிய புதிய தலைமுறையினருக்கும் இடையிலான நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு (ஒருப்)பேரரசின் கூட்டமைப்பை அமைவதில் ஜப்பான் வெற்றி பெற்றது.

இந்திய தீர்க்கதரிசியான கௌதம சித்தார்த்தாவின் தத்துவத்தை அதாவது புத்த மதத்தை சீனா ஏற்றுக் கொண்டது. கன்பூசியம் பின்வாங்கியது. பட்டு சாலையை(Silk Road) கட்டுப்படுத்தி ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் நஷ்டம் விளைவிக்கும் வகையில் சீனா போதுமான இராணுவ வலிமையுடன் ஆயுதம் ஏந்தியிருந்தது. பின்னர் அது நான்கு நூற்றாண்டுகள் உள்நாட்டுப் போரில்  மூழ்கியது.

இந்தியா ராஜகுப்த வம்சத்தால் ஆளப்பட்டது. இது குறிப்பிடத்தக்க பொருளாதார செழிப்புடன் திகழ்ந்தது.பாரஸீகம் தனது சிறுபான்மையினரு டனான உள்நாட்டு நெருக்கடிகளுடன் போராடியது. ஈரானின் அரசியல் உறுதியற்ற தன்மையைப் பயன்படுத்தி யமன்,பாரசீக அடிமைத்தனத்தை சிதறடித்தது.ஈராக்கில், கிறிஸ்தவ லக்மிட் கப்பல்கள் உடன் நுழைந்து பாரசீக பேரரசை அச்சுறுத்தியது. ஃபிரான்ஸ்  அப்போது (ஃபிரான்ஸ்,பெல்ஜியம்,வட இத்தாலி போன்ற நாடுகள் அடங்கிய பழைய) கவ்ல்(Gaul) பகுதியாகத் திகழ்ந்தது.(ஃப்ராங்கிஸ் அரசர்) க்ளோவிஸ் இறந்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, (ஃபிரான்ஸானது) போர்கள், கொலைகள் மற்றும் கொள்ளை ஆகியவற்றால் சூரையாடப்பட்டது.நகரங்களும் கிராமப்புறங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.

ரோமானிய நாகரீகங்களின் தடயங்கள் மறைந்துபோய், காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது.இங்கிலாந்து ஆங்கிலோ-ஸாக்சன்களால் படையெடுக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்து வந்த, பலதெய்வ வழிபாட்டைக் கொண்டவர்களாக இருந்துகொண்டு அவர்கள் ரோமானிய நாகரீகத்தின் வலுவற்றத் தடயங்களை அழித்து தங்களது தெய்வகளை வழிபடும் கோயில்களை அங்குக் கட்டினர்..இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு, அரேபியர்கள் (ஜாஹிலியா) அறியாமையிலும், (பல்வேறு) முரண்பாடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இஸ்லாம் உதயமாகியபோது, கிட்டத்தட்ட அனைத்து அரேபியர்களும் பல தெய்வ வாழிபாடுகளைக் கொண்டிருந்தனர்; மேலும் உருவ வழிபாட்டின் மீது உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.அவர்கள் பல தெய்வ வாழிபாட்டினராவர். அவர்கள் பழங்குடிப் போர்களால் பிளவுபட்டு, பலம்மிக்கவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துவந்தனர்.ஒழுக்கக்கேடு அங்கே உச்சத்தில் இருந்தது; மது பானங்கள், சூதாட்டம், நடனம், வட்டி,

இளம் பெண்களை உயிருடன் அடக்கம் செய்யும் பழக்கம் போன்றவை அவர்களிடையே வழக்கமான நடைமுறைகளாகும்.இன்னும் கூடுதலாக, அவர்கள் விந்தையான உருவ சிலைகளையும்,மனிதர்கள் அல்லது பிற உருவங்களில் செதுக்கப்பட்ட பிற உருவங்களையும் வணங்கிவந்தனர். அவர்கள் அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத், ஹூபல் போன்ற பெயரைக் கொண்ட சிலைகளிடம் வேண்டினர். அவைகளுக்கு குழந்தைகள், குணமளித்தல், செல்வம் போன்ற எல்லாவற்றையும் (அவர்களுக்குக்) கொடுக்கும் திறன் இருப்பதாக அவர்கள் நம்பினர்.முதல் மூன்று (சிலைகளும்) குறிப்பிடத்தக்க முறையில் வணங்கப்பட்டன.(அவர்களது)குலமரபு சார்ந்த அமைப்பில், ஒரு மகனைப் பெற்றிருப்பது  பெரும் மரியாதைக்குரியதாகும். (ஆண்)மைந்தர்களே குடும்பத்தின் பலமாகக் கருதப்பட்டனர். அவர்கள் மேய்ப்பர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்தனர். சிறிதளவு சாக்குப்போக்கினால் நடத்தப்பட்ட குலப்போர்கள் முடிவற்றவையாக இருந்தன; தேவைப்பட்டால் அவர்கள் ராஸியாவை நடைமுறைப்படுத்துவர். [அதாவது: மற்றவர்களிடத்தில் மார்க்கப் போர் நிறுத்தங்கள்,  பேச்சுவார்த்தைகள் மற்றும் அகிம்சை ஒப்பந்தங்கள் போன்றவை]. பெண்கள் மட்டுமே பெற்றிருப்பது அவர்களின் பார்வையில் வெறுக்கத்தக்க விஷயமாகும். இந்த கடினமான பதுக்கள்(காட்டரபிகள்) சிறுமிகளை ஒரு பெரிய சுமையாக கருதினர், இன்னும் சிலர் பிறக்கும்போதே அவர்களை(பெண்குழந்தைகளை) உயிருடன் புதைத்தார்கள், ஏனெனில் பெண்குழந்தைகளால் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் [அவர்களுக்கு] கண்ணியம் என்பது அரேபியர்களிடையே (மிகவும்) புனிதமான(தாக கருதப்பட்ட)து.

அரேபியா, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வறண்ட நிலமாக இருந்த நிலையில், இஸ்லாத்தை பெற்றெடுத்தது. இது எரிமலை மற்றும் காற்றோட்டமான குன்றுகளுடன் கூடிய மணல் தீவு போல் காணப்படுகிறது. ஆயினும், இந்த பாலைவனப் பகுதிகளிலும், வழிகளிலும் சிரியாவிலிருந்து எமனுக்குச் சென்று வரும் காட்டரபிகள் தலைமையிலான ஒட்டக வணிகர்களால் வழிநடத்தப்படுகின்றன.இந்த வணிகர்கள், அதனுடைய பனை மரங்கள் மற்றும் பிற பேரீச்சமரங்களால்  அடையாளம் காணக்கூடிய பல பாலைவன சோலைகளுக்கும் நன்றிசெலுத்தி (அங்கு)வாழ முடியும்.

நஜ்ரான், யத்ரிப், ஃபதக், ஃகைபர், மத்யன், தபுக் ஆகியவை அனைத்தும் காட்டரபிகளால் ஓய்வெடுக்கும் இடமாக அறியப்படுகின்றன, அங்கு அவர்கள் பனை மற்றும் பேரீட்ச மரங்களின் நிழலில் அவர்களது தாகத்தைத் தணிக்கிறார்கள், அவை பாலைவன மனிதர்களின் பாதுகாப்பிற்கான இறை ஏற்ப்பாடாகும்.வணிகர்கள் முஸ்லீம் உலகின் ஆன்மீக தலைநகரான மக்காவில் குடியேறினர், இது அல்லாஹ்(தஆலா)வால் அருள்பாலிக்கப்பட்டதும் மேன்மைப்படுத்தப்பட்டதுமான ஓர் இடமாகும். அவர்கள் அனைவரும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறியப்பட்ட குலங்களாகவும்  பழங்குடியினராகவும் அமையப்பெற்ற நாடோடி அல்லது அங்கேயே வசிப்பவர்களாவர், புகழ்பெற்ற குரைஷி குலத்து மக்கள் ஹாஷிம் உட்பட பத்து குலங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவானது, அதன் குறுகிய வீதிகளில் வணிகர்களின் கூட்டத்தை ஈர்க்கின்ற ஒரு வளம் மிக்க நகரமாகும். ஒவ்வொரு ஆண்டும் அரேபியர்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் யாத்திரை மேற்கொண்டு கஅபா ஆலயத்துக்கு வருகைத் தருகிறார்கள். கனசதுர வடிவிலான இந்த ஆலயத்தின் கல், வெண்கலம் மற்றும் மரத்தால் ஆன 360 சிலைகளை அவர்கள் வணங்குகிறார்கள்.அரேபிய மக்கள் அனைவரும் வருடத்தின் சில மாதங்களை ரஜப் மாதத்தைப் போன்று புனிதமானதாக கருதுகின்றனர். மக்கா (மக்கா) என்பது சமூக மற்றும் ஆன்மீக ரீதியில் தனிநபர் நடத்தையின் சிறிதளவு செல்வாக்கும் இல்லாத (ஆதிக்கமில்லாத), மோசமான உருவ வழிபாட்டை நடைமுறையில் கொண்ட மாபெரும் யாத்திரைக்கான இடமாகும்.மக்காவுக்கு அருகிலுள்ள உகாஸில், மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்படுகிறது. (புனித)யாத்திரையும், கண்காட்சியும் ஏராளமான செல்வத்தை கொண்டு வருகின்றன, இது மக்காவை மிகவும் வளர்ந்த நகரமாகவும் மாநிலமாகவும் உருவாக்குகிறது. அதிகாரங்களைப் பிரித்து பத்து பரம்பரைத் தலைவர்களின் குழுவால் இது நிர்வகிக்கப்படுகிறது.மக்காவாசிகள் சிறந்த பயண வணிகர்களாவார்கள் (பயண வணிகத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்). அவர்கள் கவிதை,நல்ல பேச்சுத் திறன் போன்ற கலைகளிலும்

எழுத்துக்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், மேலும் இரவு கதைகளை எவ்வாறு விவரிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். பெண்கள் குறிப்பாக சமூகத்தின் உயர்தரங்களில் உள்ளவர்கள் நல்ல முறையில் நடத்தப் பட்டனர். அவர்களுக்கு சொத்தை தனக்கே உரியதாக்கிக் கொள்ளும் உரிமை இருந்தது. அவர்களுக்கு திருமணத்திற்கு தங்களது ஒப்புதலை வழங்கவோ அல்லது விவாகரத்தை முயன்றுப் பெறுகின்ற உரிமையும் இருந்தது.அரேபியர்களின் குணங்களும் தவறுகளும் அவர்களது வாழ்வியல் சூழல்களினால் உருவான குணங்களும் தவறுகளும் ஆகும். கண்ணியம் என்பது அரேபியர்களிடையே புனிதமானதாகும், இன்னும் அவர்கள் தங்களின் சமூகத்தில் தங்களது மரியாதையை தக்க வைத்துக்கொள்ள தங்களின் மகள்களை உயிருடன் புதைக்கும் அவசியம் ஏற்படுமாயின் அதனையும், அவர்கள் தயக்கமின்றி அவ்வாறே செய்பவர்களாவர். ஒருபுறம், மனிதநேயத்தை பிரதிபலிக்கின்ற பண்பாகிய நட்பு பாராட்டுதலையும், சிறந்த விருந்து உபசாரமளிப்பதையும் அவர்கள் கொண்டிருந்தனர். ஆயினும் மறுபுறமோ, அவர்கள் அதே கண்ணியத்தின் பெயரால் கொலைசெய்யவும் தயங்காதவர்களாயிருந்தனர்.

வரலாற்றாசிரியர், ஹெர்டர் [இஸ்லாமியத்திற்கு முந்தைய] அரேபியர்களை (பற்றி இவ்வாறு நமக்கு விவரித்துள்ளார்: அவர்கள் தங்கள் மூதாதையர்களின் குல ஆட்சி முறையை பாதுகாத்து வந்தனர்;அவர்கள் இரத்தவெறிபிடித்தவர்களாகவும், ஒரேயடியாக அடிபணிந்துவிடுவதுமான முரண்பாட்டில் தனித்தவர்களாக இருந்தனர்;கோட்பாடுகளிலும், மூட நம்பிக்கைகளிலும் ஆர்வமும், பேராசையும் உடையவர்களாக இருந்தனர்; ஒரு புதிய சிந்தனை அவர்களை ஆதிக்கம் செலுத்தும் போது மிகப் பெரிய விஷயங்களை செய்யும் திறன் கொண்ட போற்றுதல்மிக்க இளைஞர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது, சுதந்திரமும், தாராள மனப்பான்மையும் பெருமையும் கொண்டவர்களாகிய அரபுகள், அதே நேரத்தில் முன்கோபமும் துணிச்சலும் கொண்டவர்கள்; தங்களது தேசத்தின் நற்பண்புகளையும், தீமைகளின் வகைகளையும் ஒருவர் அவர்களிடம் காணமுடியும்.தங்களின் சொந்த தேவைகளுக்காக கொடுக்க வேண்டிய அவசியமானது அவர்களை சுறுசுறுப்பானவர்களாக ஆக்குகிறது.  சகித்துக்கொள்வதற்கு கடமைப்பட்டுள்ள அனைத்து வகையான துன்பங்களிலும் பொறுமையை மேற்கொள்பவராக அவர்(களைக்)காணலாம்;

 அனுபவிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரே நல்ல (விஷயம்) என்ற அடிப்படையில் அவர்(கள்) சுதந்திரத்தை நேசிக்கிறார்(கள்),ஆயினும், அனைத்து (வித)அடக்குமுறை(கள் மீதான) வெறுப்பினால் அவர் சண்டையிடக் கூடிவரும் ஆவார்.தனக்குத்தானே கடின சித்தத்துடன்  இருப்பதால், அவர் கொடூரமானவராகி,எப்போதும் பழிவாங்குவதற்கு தான் ஆர்வத்துடன் இருப்பதாகவும் காட்டிக்கொள்கிறார்.காட்டரபிக்கு அவரது விடுதலையும், அவரது சுதந்திரத்தையும் விட வேறெதுவும் விருப்பமானதாக இல்லை; அவரிடம் இருந்த இந்த நல்லவிஷயம் காலம்காலமாக அப்படியே வைத்திருக்க முடிந்தது: இவ்வுலகை ஆதிக்கம் செலுத்திய அனைத்து வெற்றியாளர்களுக்கும் அதனை (அவர்களிடமிருந்து) ஒருபோதும் அடிமைப்படுத்திட முடியவில்லை. எப்போதுமே அரேபியர்களின் மீதான எந்த ஆதிக்கமும் குறுகிய காலத்திற்கே நிலைத்திருந்தது, மேலும் அரேபியர்கள்,அரேபியர்களுக்குள் சண்டையிடாத வரை குறுகியக்காலத்திற்குக் கூட (அத்தகைய ஆதிக்கவாதிகள்) நிலைபெற முடியாதவர்களாய் இருந்தனர்.

மொத்த உலகின் தட்பவெப்பநிலைகளும் பூமியின் வேறு எந்த மண்டலத்தைக் காட்டிலும் (அங்கே) வெளிப்பட்டன.அரேபியா அதன் அனைத்து வேறுபாட்டிலும் உலகின் மிக சிறிய அளவாக இருந்தது. இந்த நிலத்தில் தான்,இந்த காலகட்டத்தில் தான், இந்த சூழலில் தான் ஒரு மனிதன் பிறக்க வேண்டும்.இந்த மனிதன் தான் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) அவர்கள் ஆவார்கள்,அப்துல்லாஹ் அவர்கள் அப்துல் முத்தலிஃப்பின் மகனாவார், அப்துல் முத்தலிஃப் ஹாஷிமின் மகனாவார்கள் [முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்த் அல்-முத்தலிஃப் இப்னு ஹாஷிம்], தனிச்சிறப்புமிக்க அல்லாஹ்வின் தூதராவார்கள்.

(ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்கள் கிறிஸ்தவ சகாப்தத்தின் 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். தனது தனித்துவமிக்க படைப்பாளனாகிய, அல்லாஹ்வின்,அருளால் பயபக்தி மற்றும் இரட்சிப்பின் ஜோதியை அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.அவர்களுக்கு இந்த அபத்தமான அறியாமையின் சங்கிலிகளை எவ்வாறு உடைப்பது என்பது தெரிந்திருந்தது. மேலும் ஒரு பயனுள்ள(இலாபகரமான) செய்தியுடன் முழு உலகையும் அழைத்தார்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை;ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.(அஸ் ஸபா 34:29)

ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் ஒரு உன்னதமான மற்றும் உயர்ந்த குறிக்கோள் பணித்திட்டத்தைக் கொண்ட ஒரு மனிதர் ஆவர்கள்.அனைத்து இஸ்ராயீலிய தூதர்களின் ஒட்டுமொத்த நற்பண்புகளின் தொகுப்பாக அவர்கள் விளங்கினார்கள்: (அவை)மூஸாவின் தைரியம், ஹாரூனின் கூர்ந்து அறியும் திறன், தாவூதின் பொறுமை, சுலைமானின் மகத்துவம்,யஹ்யாவின் எளிமை, ஈஸாவின் பணிவு போன்றவை ஆகும்,அவர்கள் அனைவரும் இறைவனின் அடியார்களாகவும் தூதர்களாகவும் இருந்தார்கள். ஓர் இறைவனை (அல்லாஹ்வை) வணங்குவதன் கீழ் மனிதர்களை ஒன்றிணைப்பதும் இறை சட்டங்கள் மற்றும் கட்டளைகளின்படி நேர்மை மற்றும் (ஒன்றுபட்ட) ஒருமைப்பாட்டின் வாழ்விற்குரிய வழியை அவர்களுக்கு கற்பிப்பதும் அன்னாரது ஒரே குறிக்கோளாக இருந்தது.

அந்த சயத்தின் போது நாம் வாழவில்லை,என்றபோதிலும் அல்லாஹ்வின் அருளால்,அல்லாஹ் நம்மை முஸ்லிம்களாக தேர்ந்தெடுத்தபோது மனித குல வரலாற்றின் இந்த பக்கம் உறுதியான மற்றும் நேர்மையான நம்பிக்கையுடன் இவற்றை நமக்குக் குறிப்பிட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

எல்லா மனிதப் பணிகளுடனும் ஒப்பிடும்போது, அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் பணிகள் மிகச் சிறந்ததும்,  அன்னாரது கருணையின்(ரஹ்மத்) அளவுகள் ஒப்பிடமுடியாததும் விலைமதிப்பற்றதும் ஆகும். அவர்களது (ரஹ்மத்)அருளானது ஒரு குடும்பத்திற்கோ,ஒரு சமூகத்திற்கோ மட்டும் வரையறுக்கப்பட்டதாக இருக்கவில்லை.மாறாக, (அது)மனிதகுலம் அனைத்திற்குமாக விரிந்திருந்தது. அவர்கள் ஒரு தனிமனிதனாக இருந்து அனைத்து மனிதர்களையும் மிஞ்சிவிட்டார்கள்.அவரகளின் வருகையுடன், புனித நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையின் அனைத்து கட்டங்களையும் கருத்தில் கொண்டவர்களாய், மனித வாழ்விற்கு தொட்டிலிலிருந்து மரணம் வரை வழிகாட்டி நெறிமுறைப்படுத்தினார்கள்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அவர்களின் ஒற்றுமை உணர்வும்

அடிமைத்தனத்தையும் பாகுபாட்டையும்,சாதியையும் ஒழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கிய முதல் மனிதர் முஹம்மது(ஸல்) ஆவார்கள். அன்னார்,தோலின் நிறம், இனம் அல்லது தேசியத்தின் அடிப்படையில் வேறுபாடு அல்லது பாகுபாடு இல்லாமல் எல்லா மனிதர்களையும் ஒரே உடல்,ஒரே குடும்பமாகவேப் பார்த்தார்கள்.அன்னார் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தில் தான் (தக்வா) மனிதனின் உயர்வு இருக்கின்றது என்றும் அனைத்து மனிதர்களும் ஆதம்(அலை) அவர்களின் குழந்தைகள் ஆவார்கள் (என்றும் கருதினார்கள்).

“அரேபியர்களல்லாதவர்களை விடவும் அரேபியர்கள் உயர்ந்தவர்கள் அல்ல,அரேபியர்களல்லாதவர்கள் அரேபியர்களை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல, கருப்பரை விட வெள்ளையருக்கோ அல்லது வெள்ளையரை  மேல் கருப்பருக்கோ எந்த உயர்வும் இல்லை. (உண்மையான) உயர்வு இறையச்சத்தில் தான் இருக்கின்றது.”இந்த வார்த்தைகளின் முலம் ,நமது உன்னத நபி(ஸல்) அவர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து செயற்கை தடுப்பு(ச் சுவர்)களையும் உடைத்தெறிந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் குழந்தைகளின் உரிமைகளும்

ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு நேசிக்கும் இயல்பு இருந்தது. அவர்கள் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து அக்கறை கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் அறிவு புகட்டி, ஊட்டி வளர்த்து, மரியாதையையும் நல்ல பழக்கவழக்கங்களையும் தங்களின் குழந்தைகளிடத்தில் சிறிது சிறிதாக புகட்டுவதை அவர்கள் ஊக்குவித்தார்கள்.

“ஒரு தந்தைக்கு தனது பிள்ளைகள் மீதான மிகப் பெரிய கடமை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு மரியாதையை கற்பிப்பதாகும்.” (திர்மிதி)

இந்த மிகப்பெரிய பொறுப்பின் படித்தரத்தைக் காட்ட, அவர்கள் அதனைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்: “ஒவ்வொரு மனிதனும் அவரது குடும்பத்திற்கு பொறுப்பாளர் ஆவார், மேலும் அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரைப் பற்றியும் அவர் கேள்வி கேட்கப்படுவார்” (புஹாரி).

முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இளம் வயதினரும்

அல்லாஹ்வின் பிரதிநிதியான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இளைஞர்களிடத்தில் (மிகவும்) கவனம் செலுத்தினார்கள்.அன்னார் இளைஞர்கள் ஒரு பயபக்தியுள்ள வாழ்க்கையை கழிக்கவும்,எல்லா நேரத்திலும் நேரான பாதையிலிருந்து அவர்களை விலக்கிவிடக் கூடிய தீய சக்திகளிடமிருந்து விலகி இருக்கவும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

“தீர்ப்பு நாளில், (இதனை)பின்பற்றும் வழிகளில் இருந்த உங்களில் ஏழு பேருக்கு அல்லாஹ் நிழலை வழங்குவான்(என்று கூறி பட்டியலிட்டார்கள்) அந்த ஏழு பேரில் ஒருவர் அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன் ஆவான்”.இந்த இளைஞர்களை அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கு எதிராக(த் தம்மைப்)பாதுகாத்துக் கொள்ள, நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானிய தூண்டுதல்களுக்கு எதிராக மிகவும் சக்திவாய்ந்த கேடயமாக

இருக்கக்கூடிய திருமணத்தை நாடுமாறு அவர்களை வேண்டிக்கொண்டார்கள்.“ஒரு மனிதனுக்கு திருமணமாகும் போது, அவனுடைய மார்க்கத்தின் (கடமைகளில்)பாதி காப்பாற்றப்படுகின்றது. மற்ற பாதியை (பாதுப்புடன்) வைத்திருக்க,அல்லாஹ்விடம் இறையச்சத்திற்காக வேண்டுவது போதுமானதாகும்”(என்று கூறினார்கள்).

அவர்கள் மேலும் கூறினார்கள்: “இளைஞர்களே! உங்களுள் எவரேனும் அதற்கு வாய்ப்புள்ளவர், தாமதமின்றி திருமணம் செய்து கொள்ளட்டும், ஏனெனில் அது அவருடைய கற்பை பாதுகாக்க உதவுகிறது. அவ்வாறு செய்ய வாய்ப்பில்லாதவர்கள்,நோன்பு நோற்கட்டும்; ஏனெனில் தீமைக்கு எதிரான கேடயம் நோன்பாகும்; மேலும் அது பாலியல் தூண்டுதலைக் குறைக்கிறது. ”

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் பெற்றோரின் உரிமைகளும் 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பாக பெற்றோர்களை,அதிலும் குறிப்பாக அவர்களின் வயோதிகக்காலத்தில் (மிகவும்)நல்ல முறையில் அன்புடனும் மென்மையுடனும் நடத்துவதை பரிந்துரை செய்துள்ளார்கள். அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மகிழ்ச்சி தந்தையின் மகிழ்ச்சியில் உள்ளது” அதேசமயம் “சுவர்க்கம் தாயின் காலடியில் உள்ளது” (என்று கூறினார்கள்).

தூய திருக்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கூறுகிறான்: ”உம்முடைய இறைவன் மிகவும் வலியுறுத்தி இவ்வாறு கட்டளையிட்டுள்ளான். நீங்கள் அவனையன்றி வேறெதனையும் வணங்காதீர்கள். மேலும் (உங்கள்) பெற்றோரிடம் (மிகவும்)நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவர் அல்லது அவர்களிருவரும் உம்முடைய வாழ்நாளில் முதுமையை எய்தி விடுவார்களாயின், நீர் (அவர்களது விஷயத்தில் வெறுப்பை காட்டும் விதத்தில்) அவர்களை “சீ!” என்று கூடச்சொல்லாதீர். அவர்களை ஏசவும் வேண்டாம் .அவர்களிடத்து (எப்போதும்)இனிமையாகப் பேசுவீராக!” (பனீ இஸ்ராயீல் 17:24)

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அண்டை அயலவர்களும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் குறிப்பாக அண்டை அயலவர்களுடன் நல்ல முறையில் உறவைப் பேணுமாறுப் பரிந்துரைத்தார்கள். எந்த அளவிற்கென்றால் தங்களை குற்றங்கூற அவர்களிடத்தில் எதுவும் இருக்க்க்கூடாது (என்று பரிந்துரைத்தார்கள்). ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தனது தீய செயல்களினால் தனது அண்டைஅயலார்களிடம் பாதுகாப்பிற்கு ஊக்கம் (உத்திரவாதம்)கொடுக்காதவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்”.

அவர்கள் மேலும் கூறினார்கள்: ”அண்டை வீட்டுக்காரர் பசியுடன் இருக்கும்போது தனது உணவை (தான் மட்டும்) உண்ணுகின்றவர்களில்  ஒருவனாக நான் இல்லை”

முஹம்மது நபி(ஸல்) அவர்களும் வயோதிகர்களும்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வயதானவர்களை மிகுந்த மரியாதையுடனும் மென்மையுடனும் நடத்தினார்கள். அவர்களைப் பொறுத்தவரை வயதானவர்கள் மதிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டு,இன்னும் தங்களின் குடும்பங்களால் அதிக சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதுமாகும். அவர்கள் நிராகரிக்கப்படவோ அல்லது அவர்கள் எஞ்சியிருக்கின்ற காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படக்கூடாது.

புனித நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதியவர்களை மதிக்காதவனும் இளையவர்களிடத்தில் இரக்கம் காட்டாதவனும் என்னைச் சார்ந்தவனல்ல” முஹம்மது நபி(ஸல்) அவர்களும் அனாதைகளும்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் அனாதைகள், விதவைகள் மற்றும் ஏழைகளுக்கு சமுதாயத்தின் தனிச்சிறப்பானதொரு அந்தஸ்தை வழங்கி, விலை மதிப்பற்ற ஆதரவான பெற்றோர்களின் அன்பினை அவர்கள் இழந்து நிற்பதால், சிறப்பான இரக்கத்தையும் அன்பையும் அவர்களிடத்தில் காட்டுமாறும் அழைப்பு விடுக்கின்றார்கள். அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அனாதைகளை (நல்ல முறையில்) கவனித்துக்கொள்பவர் என்னுடன் சொர்க்கத்தில் ஆள்காட்டி விரல் நடு விரலை அடுத்து இருப்பது போன்று இருப்பார் ”.விதவைக்காக சேவை செய்பவர் எல்லா இரவு முழுவதும் தொழுதும், பகலில் நோன்பு நோற்பவரையும் போன்றாவார் என்றும் அவர்கள் கூறினார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் பெண்களின் உரிமைகளும்

பெண்களுக்கு எந்த ஒரு மனிதத் தன்மையும்(மதிப்பும்) வழங்கப்படாத ஒரு நாட்டில் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவளுக்கு உயர்ந்த அந்தஸ்தையும், சமூகத்தின் முக்கிய உரிமைகளையும் அவளுக்கு வழங்கினார்கள்.பெண்ணை தனது கணவரின் வன்முறையிலிருந்தும்,அவளது கணவன் வீட்டார் மற்றும் அவளது உறவினர்களின் கொடுங்கோன்மையிலிருந்தும் அவளது கண்ணியம், மரியாதை மற்றும் கற்பைப் பேணிப் பாதுகாக்க அவர்கள் சட்டங்களை நிறுவினார்கள்.”தனது மனைவியிடம் மிகவும் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே முஸ்லிம்களில் மிகச் சிறந்தவராவார்” என்று கூறினார்கள்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் ஒரு பெண்ணின் மதிப்பின் மீது கருத்தூன்றி அதிகமாகப் பேசவும் தவறவில்லை. அவர்கள் கூறினார்கள்: “ ஒருவருக்கு மகள்கள் மட்டுமே இருந்து அவர் அவர்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கவனித்துள்ளார் என்றால், அவருக்கு அவர்கள்(மகள்கள்)  நரகத்திற்கெதிரான கேடயமாக  இருப்பார்கள் . ”

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் விலங்குகளும்

நீதி, தர்மம் மற்றும் நற்பண்பிற்கான நபிப் பெருமானாரின்) அக்கறையானது மனிதர்களோடு மட்டும் நின்றுவிடாமல் விலங்குகளுக்கும் கூட கிடைத்துள்ளது. ஒரு உயிருள்ள விலங்கை குறிவைப்பவரை(வேதனை செய்பவரை) அவர்கள் சபித்தார்கள்.அன்னார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நபர் தனது பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது தனக்கு மிகவும் தாகம் ஏற்பட்டு,.அவர் (திடீரென்று) ஒரு கிணற்றின் பக்கம் வந்து, தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதற்காகத் அதில் இறங்குகின்றார்..(அருந்தி விட்டு) வெளியே வந்ததும், மூச்சு வாங்கும் நாய் ஒன்று (தண்ணீரைத் தேடியவாறு) தூய்மையற்றதை உண்பதைக் காண்கிறார்.அந்த மனிதர் தனக்குத்தானே ‘நான் இருந்ததைப் போலவே இந்த நாயும் தாகமாக இருக்கிறது,’ என்று நினைத்துக் கொண்டார்: அதனால் அந்த மனிதன் மீண்டும் கிணற்றில் இறங்கி, தனதுத் தோல் காலுறையை தண்ணீரால் நிரப்பி, அதை வாயில் பிடித்துக் கொண்டு, மீண்டும் மேலே ஏறி, நாயின் தாகத்தைத் தணித்தார்.அல்லாஹ் இந்த செயலை மிகவும் உயர்வானதாகக் கருதி அதனால் அந்த மனிதனை மன்னித்தான். ”

பிறகு பின்வரும் இந்த கேள்வி நபி(ஸல்) அவர்களுக்கு முன் வைக்கப்பட்டது: “அல்லாஹ்வின் தூதரே!விலங்குகளுக்குச் செய்த நன்மைக்காக, தகுந்த சுவர்க்கத்தின் பிரதிபலன் கிடைக்குமா? ”அப்போது புனித நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:“ஆம்!, ஒவ்வொரு ஜீவனுக்கும்,ஒவ்வொரு நன்மைக்கும் தகுந்த வெகுமதி (அல்லாஹ்விடம்) கிடைக்கும்”.

பரிபூரணமான முன்மாதிரி ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்

எனவே நமது நேசத்திற்குரிய தூதர் ஒரு குறிப்பிடத்தக்கவரும் சிறந்த மனிதருமாவார்கள். ஒரு மனிதராகவும் அல்லாஹ்வின் தூதராகவும் அவரது உலக வாழ்க்கை இறை கட்டளைகளின் மிகச் சிறந்த செயல்வடிவமாகும். அவர்கள் ஒரு பரிபூரணமான மனிதரும், அல்லாஹ்வின் தூதரும் ஆவார்கள். நமது நம்பிக்கையிலும் நமது மனித வாழ்க்கையிலும் எவ்வாறு உன்னத நிலையை அடைய முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

மிகத்தெளிவாக தூய திருக்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு கூறுகின்றான்:

“உண்மையாக உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் மிக மேலான முன்மாதிரி உண்டு”(அல் அஹ்ஸாப் 33:22)

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தூய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி,”இந்த பூமியில், மார்க்கத்தின் மிகவும் வெற்றிகரமான மனிதர்(தலை சிறந்தவர்) ” “The most successful man of religion on this earth.” என்று அறிவிக்கிறது.

கிறிஸ்தவ சகாப்தத்தின் 632 ஆம் ஆண்டில் தனது 63 வது வயதில் நமக்கு இவ்வாறு அறிவுறுத்தியவர்களாக இந்த உலகத்தை விட்டு செல்கின்றார்கள்,:

“நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன், அவற்றை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்: இறைவனின் வேதம் மற்றும் அவனது நபியின் சுன்னத்(வழிமுறை).”

இத்துடன், நான் இங்கே முடித்துக்கொள்கிறேன். நாம் தொடர்ந்து பேசினால், நமது நேசத்திற்குரிய நபி ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி அதிகமாகக் கூற வேண்டியிருக்கும். பௌதீக, ஒழுக்க மற்றும் ஆன்மீக ரீதியிலான அன்னாரது சிறப்புகளை விவரிக்க (ஒரே)ஒரு சொற்பொழிவு (மட்டும்)போதாது. அல்லாஹ் அன்னார் மீதும், அன்னாரின் குடும்பத்தினருக்கும், அன்னாரின் தோழர்களுக்கும், உம்மத்தே முஹம்மதியாவில் உள்ள நம் அனைவருக்கும் பற்பல அருள்களையும் பொழிவானாக! நம்முடைய நேசத்திற்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நாட்களைப் போலவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் மகிமைக்கும் அல்லாஹ் நமக்கு வழியைத் திறந்து தருவானாக!.

உங்களது கவனத்திற்கு நன்றி.

அஸ்ஸலாமூ அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

(ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆசிம் (அலை)* அவர்களின்  ஸீரத்துன் நபிப் பேருரை 31 அக்டோபர் 2020 15 ரபிய்யுல் அவ்வல் 1441ஹிஜ்ரி)
குறிப்பு: மொழிபெயர்ப்பில் தவறுகள் இருக்கலாம்.இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கிற்குள் செல்லவும்.:

http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2020/sphmasun_31oct20.pdf