Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

ஜமாஅத் அறிமுகம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,

அவனது அன்பும் அருளும் கருணையும் சாந்தியும் சமாதானமும் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரை பின்பற்றிய நேர்வழி பெற்ற கலீபாக்களின் மீதும் சீர்திருத்தவாதிகள் மீதும் உண்டாவதாக! இன்னும் கடந்த நூற்றாண்டின் முஜத்தித் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் அலைஹிஸ்ஸலாம் மற்றும் இந்நூற்றாண்டின் “முஜத்தித் மற்றும் கலீஃபத்துல்லாஹ்” முனீர் அஹ்மத் அஸிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இந்த உம்மத்தின் மீது எந்த அளவுக்கு கருணை கொண்டிருந்தார்களோ அந்த அளவிற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்:-
எங்கள் இறைவா! உங்கள் இறைவன் மீதுநம்பிக்கை கொள்ளுங்கள் என்ற நம்பிக்கையின் பக்கம் அழைப்பவரின் அழைப்பைக் கேட்டோம் . எனவே நாங்கள் ஈமான் கொண்டோம்; (எனவே) எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்களுடைய தீமைகளை எங்களை விட்டும் அகற்றுவாயாக; எங்கள் உயிரை நற்சான்றோர்களுடன் கைப்பற்றுவாயாக! – என்று கூறுகின்றான்.

இதில் எல்லாம் வல்ல இறைவன் கூற வருவது என்னவென்றால் நீங்கள் இறைவனை அல்லது இறைவனை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காதபோது அளவற்ற அருளாளனான இறைவன் அவன் பக்கம் அழைக்கும் தனது பிரதிநிதியை அனுப்பி காலத்தின் வழிகேட்டை சுட்டிக்காட்டி சீர்திருத்தம் செய்கிறான். இதையே நாம் நபிமொழியில் பார்க்கும்போது “ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒரு முஜத்திதை (சீர்திருத்தவாதியை) அல்லாஹ் அனுப்புவான்.” (சுனன் அபூ தாவுத்) மற்றொரு நபிமொழியில் “இமாமைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். “(புகாரி) என்று வருகிறது. மேலும் பிற்காலத்தில் வரக்கூடிய நுபுவ்வத்தின் பணியை சட்டிக்காட்டும் பொழுது நற்செய்தி கூறுகின்ற நுபுவ்வத் எஞ்சியிருக்கிறது (புஹாரி) மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் மற்றும் நபி பெருமானாரின் வாக்குறுதியின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் உயிருள்ள இறைவனின்பால் மக்களை அழைத்து அவன் பக்கம் ஒன்று சேர்க்கின்ற பணியை இறைவன் தன்னால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமே செய்கின்றான். அதனடிப்படையில் இவ்வுயர்பணியை செய்வதற்காக இக்காலத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட மொரீஷியஸ் நாட்டைச் சார்ந்த முனீர் அஹமத் அஸிம் (அலை) அவர்கள் தன்னை இந்நூற்றாண்டின் முஜத்திதாகவும், உம்மத்தி நபியாகவும் இமாமாகவும் எல்லாம்வல்ல அல்லாஹ் தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார்கள்.  அதற்கு சான்றாக திருக்குர்ஆன் ஹதீஸ் மற்றும் வானத்தின் அடையாளங்களை காட்டினார்கள். இவ்வுயர் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் “www.jusaitn.org” என்ற ஜமாஅத்தின் இணைய தளத்தை தமிழக ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் தமிழக கிளைசார்பாக மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்