Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

இறைவனின் இருப்பு

பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனே எல்லோருடைய  பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல் அன்ஆம் 6:104)

இந்த வசனத்தில், மனிதனுடைய  கண்கள் இறைவனைக் காணும் திறன் கொண்டவை அல்ல எனும் உண்மையின் பக்கம் இறைவன் மனிதனின் கவனத்தை ஈர்க்கிறான்.  ஏனென்றால் அவன் நுட்பமானவன்; நுட்பமான விஷயங்களை கண்களால் உணர முடியாது. அப்படியானால், இறைவனை அறிவதற்கான வழி என்ன?  இந்த கேள்விக்கு இறைவன், “ஆனால் அவன் பார்வைகளை அடைகிறான்” என்று கூறி பதிலளிக்கிறான். அதாவது, மனிதனின் கண்களுக்கு இறைவனைக் காணும் திறன் இல்லை என்றாலும், அவன் தனது ஆற்றலைக் காண்பிப்பதன் மூலமும், அவனுடைய பண்புகளின் வெளிப்பாட்டினாலும் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்துகிறான். எனவே, மனிதனுக்கு இறைவன் தன்னை வெளிப்படுத்தும் வழிகள் பன்மடங்காக உள்ளது. அவன் தனது எல்லையில்லா ஆற்றலை, சில நேரங்களில் அழிவுகளைத் தூண்டும் அறிகுறிகளாலும், சில நேரங்களில் தீர்க்கதரிசிகளின் வழியாகவும், சில நேரங்களில் கருணையின் அறிகுறிகளாலும், சில நேரங்களில் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும் காட்டுகிறான்.பொருள்முதல்வாதத்தைச் சார்ந்திருக்கும் இந்த யுகத்தில் காணப்படும்  அனைத்து கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மத்தியில் இறைவன் இருக்கிறான் என்பதை நம்பிக்கை கொள்வது மிகப் பெரும் விஷயமாகும்.  சிலைகளை வணங்குபவர் இறைவனுடன் மற்ற கடவுள்களை வணங்க ஏற்படுத்தியிருந்தாலும், குறைந்தபட்சம் அவர் இறைவனின் இருப்பை நம்புகிறார்.  நாத்திகர் எவ்வாறாயினும், உயர்ந்த இறைவனின் இருப்பை மறுக்கிறார். காரணம், இன்றைய அறிவியலில் அனைத்துமே  கண்களால் நேரடியாக காண்பதை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. எனவே, இறைவன் என்றொருவன் இருக்கிறான் என்றால், அவனை எங்களுக்குக் காட்டுங்கள். அவனைப் பார்க்காமல் நாங்கள் எவ்வாறு அவனை நம்புவது? என்பதே ஒரு நாத்திகரின் வாதமாகும். 

இன்றைய சூழலில், மேற்கத்திய கலாச்சாரத்தின்  தாக்கங்கள் பல இளைஞர்களின் இதயங்களிலிருந்து தெய்வீகத்தின் அடையாளத்தை அழிப்பதன் பாதையில் வெகுதூரம் சென்றுள்ளதாலும், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் பாரிஸ்டர்கள் போன்றவர்கள் இறைவனின் இருப்பை மறுக்கத் தொடங்கியுள்ளதாலும்,  சமூகத்தின் மீதுள்ள பயத்தின் காரணமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக அறிவிப்பதைத் தவிர்க்கும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இறைவன்மீது உண்மையில் நம்பிக்கை  இல்லாததாலும், இந்த பிரசங்கத்தை எழுத்து வடிவில் எழுத  அல்லாஹ் என்னை ஊக்கப்படுத்தினான். எனவே, இதன்மூலம் சில அதிர்ஷ்டசாலிகளான மனிதர்கள்  பலன் பெறலாம்.

ஒரு நாத்திகர் முன்வைக்கும் முதல் கோரிக்கை, “நீங்கள் இறைவனை எங்களுக்குக் காட்டினால், நாங்கள் அவனை நம்புவோம்” என்பதேயாகும். மனிதனைப் பொறுத்தவரை அவன் வெவ்வேறு விஷயங்களை வெவ்வேறு புலன்களின் மூலமாக உணர்கிறான். சில விஷயங்களை நாம் பார்ப்பதன் மூலமாகவும், சிலவற்றைத் தொடுவதன் மூலமாகவும், சிலவற்றை வாசனையினாலும், சிலவற்றைக் கேட்பதன் மூலமாகவும், சிலவற்றை சுவைப்பதன் மூலமாகவும் உணர்கிறோம். ஒரு வண்ணம், பார்ப்பதன் மூலமாகவே அறியப்படுகிறது. அது வாசனை, தொடுதல் அல்லது சுவைத்தலின்  மூலமாக அறியப்படுவதில்லை. ஒரு வண்ணத்தின் சத்தத்தைக் கேட்கும்படி செய்தால் மட்டுமே  நான் அந்த வண்ணத்தை ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர் கூறினால், அந்த மனிதர் ஒரு முட்டாளாக கருதப்படமாட்டாரா? வண்ணத்தைப் பார்ப்பதன் மூலமாக அறியப்படுவது போன்றே, வாசனையை நுகர்வதன் மூலமாகவே அறிய முடியும். 

இப்போது, ஒருவர் ஒரு ரோஜாவின் மணத்தை சுவைக்கும்படி செய்தால் மட்டுமே அதை மணமுள்ளதாக ஏற்றுக்கொள்வதாக  கூறினால், அத்தகைய நபர் அறிவுள்ளவராக கருதப்படுவாரா? மற்றொரு புறம், புளிப்பு, இனிப்பு, கசப்பு மற்றும் உவர்ப்புத்தன்மை ஆகியவைப் போன்று சுவைப்பதன் மூலம் மட்டுமே அறியக்கூடிய விஷயங்களை வாசனையின் மூலம் யாராவது தெரிந்து கொள்ள முயன்றால், அவரால் ஒருபோதும் அவற்றை உணர முடியாது. ஆகவே, நம் கண்களால் காணக்கூடியவற்றை மட்டுமே நாம் ஏற்றுக்கொள்வதும், கண்களால் அறிய முடியாதவற்றை நம்ப மறுப்பதும் சரியல்ல. அவ்வாறு செய்வது சரியானது என்றால், ரோஜாவின் வாசனை, எலுமிச்சையின் புளிப்பு, தேனின் இனிப்பு, இரும்பின் கடினத்தன்மை மற்றும் ஒலியின் மெல்லிசை ஆகியவற்றை நாம் மறுக்க வேண்டும், ஏனென்றால் இவற்றை நாம் கண்களின் உதவியால் உணரவில்லை. எனவே, நாம் அவனை நம்புவதற்கு முன்பு இறைவன் நமக்குக் காட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு பொருத்தமில்லாதது! அத்தகைய கோரிக்கையை முன்வைப்பவர்கள் ரோஜாவின் நறுமணத்தையோ அல்லது தேனின் இனிமையையோ கண்களால் பார்த்தா அதை நம்புகிறார்கள்? அப்படியானால், உயர்ந்த இறைவனைப் பொறுத்தவரையில், அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அவசியமான  நிபந்தனையாக அவனை பார்க்க வேண்டும் என்று ஏன் முன்மொழிகிறார்கள்? 

மேலும், மனிதனுக்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. அவை இருப்பதைக் பார்க்காமலே அவன் அதை அங்கீகரிக்கிறான். மனிதன் தன் இதயம், கல்லீரல், மூளை, குடல், நுரையீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றைப் கண்களால் பார்த்த பின்னரா நம்புகிறான்? இந்த உறுப்புக்கள் அவனுக்குக் காண்பிக்கப்படும்படி அவனது உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டால், அவற்றைப் பார்ப்பதற்குமுன் அவன் இறந்துவிடுவான். எனவே,எல்லாவற்றையும் பார்ப்பதன் மூலம் நம்மால் அறிய முடியாதெனினும் அவை ஐந்து வெவ்வேறு புலன்களின் மூலமாகவே அறியப்படுகின்றன என்பதைக் காண்பிப்பதற்காகவே இந்த எடுத்துக்காட்டுகளை நான் இங்கே கொடுத்திருக்கிறேன். இந்நிலையில்,  ஐந்து புலன்களால் கூட அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன என்பதற்கும், அவற்றை அறிந்து கொள்வதற்கு மற்றொரு வழியும் உள்ளது என்பதற்கும்  இப்போது நான் உதாரணமாக காண்பிக்கிறேன்.  காரணம் கற்பித்தல், நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றை இந்த உலகத்தில்  யாரும் மறுப்பதில்லை. எனினும்  அவற்றை பார்க்கவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ, தொடவோ முடிவதில்லை. காரணம் கற்பித்தல், நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன் ஆகியவை இருப்பதாக நாம் எப்படி அறிந்தோம்? அல்லது சக்தியை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். பலவீனமாகவோ அல்லது வலிமையாகவோ இருக்கும் ஒவ்வொரு நபரும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சக்தியைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் எவரேனும் இதுவரை அந்த சக்தியை பார்க்கவோ, நுகரவோ, தொடவோ  அல்லது சுவைத்தோ இருக்கிறார்களா? எனவே, ஐந்து புலன்களின் மூலம் நாம் இந்த விஷயங்களை அறிந்திருக்கவில்லை என்பதையும் அவற்றின் இருப்பை உளப்பூர்வமாக  உணர வேறு சான்றுகள் உள்ளன  என்பதையும் நம்மில் இருக்கும் சாதாரணமான மனிதனும் அறிந்தே இருக்கிறான். 

ஆனால் இறைவன் இந்த எல்லா பொருள்களைவிடவும்   நுட்பமானவனாக இருக்கிறான். இறைவன் நமக்குக் காட்டப்படாவிட்டால், இறைவன் இருப்பதை  நம்ப முடியாது என்று நாம் உரைப்பது எவ்வளவு அநியாயமானது . மின்சாரத்தை எவரேனும் இதுவரை பார்த்ததுண்டா? ஆனால் தொலைதூரங்களுக்கு செய்திகளையும் சிக்னல்களையும் கடத்துவது, விளக்குகள் மற்றும் இயந்திரங்களை மின்சாரம் மூலம் இயங்க வைப்பது போன்றவற்றை நம்மால் மறுக்க முடியுமா? இந்த மின்சாரத்தின் கண்டுபிடிப்பு இயற்பியல் அறிவியலின் களத்தில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளில் எவரேனும் அதைப் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது அல்லது தொடுவது ஆகியவற்றின் மூலம் அதைக் கண்டுபிடித்ததுண்டா? ஆனால் அதன் இருப்பை நாம் மறுத்தால், சூரியனின் கதிர்கள் எவ்வாறு பூமியை அடைகின்றன என்பதற்கு நம்மால் விளக்கமளிக்க முடியாது. எனவே,கண்களுக்கு புலப்படாமலும், வேறெந்த ஐம்புலன்களாலும் உணரப்படாமலும் இருக்கும்  பல விஷயங்கள் நம்பப்படும் நிலையில்  இறைவனை நம்புவதற்கு, அவர் கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எவ்வளவு அநியாயமானது?  இறைவனைக் கண்களால் காண முடியும். எனினும், அவனைப் பார்க்கக்கூடிய ஆற்றலுடைய  கண்களால் மட்டுமே அவனைப் பார்க்க முடியும். எனினும், எவரேனும் அவனைக் காண விரும்பினால், அவன் தனது ஆற்றலின் மூலமாக இந்த உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கிறான். அவன் கண்களைவிட்டு மறைந்திருந்தாலும் கூட  எல்லா பொருள்களைவிடவும் தனது ஆற்றலால்  மிகவும் வெளிப்படையானவனாக இருக்கிறான். துவக்கத்தில் நாம் விளக்கமளித்தது போன்று இந்த உண்மை சுருக்கமாக இருப்பினும் மிகவும் நேர்த்தியாக புனித குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வசனங்களின் மூலம், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு முகவர் இருக்க வேண்டும் என்பதையும், இந்த முழு பிரபஞ்சத்தையும் நாம் ஆராய்ந்துப் பார்த்தால், இறைவனே எல்லாவற்றிற்கும் முடிவாக இருக்கிறான் என்பதையும், அவன்தான் இந்த பிரபஞ்சத்தை வழிநடத்துகிறான் என்பதையும் இறைவன்  சுட்டிக்காட்டி மனிதனின்  கவனத்தை ஈர்க்கிறான். இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தின் படைப்பைப் பற்றி ஒரு நபர் சிந்தித்தால், இந்த பிரபஞ்சத்தை ஒரு படைப்பாகக் கொண்டுவந்த ஒரு இறைவனின் இருப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.